விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக அழித்தொழித்த அரசாங்கம் இன்று தமிழ் மக்களின் உரிமைக்குரலாகச் செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அழித்தொழிக்க முயற்சித்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.வடமராட்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடாந்து உரையாற்றுகையில்,
இந்த அரசு வடக்கு கிழக்கில் மிக அதிகமான சுயேட்சைக் குழுக்களை நிறுத்தி தமிழர் வாக்குகளை பிரிப்பதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு கபடத்தனமாகச் செயற்பட்டு வருகின்றது.
எந்தவித இலக்குமற்று எந்தவித சிந்தனையும் அற்று அரசிடம் கைநீட்டி வாங்கிய பணத்திற்காக கல்விமான்கள் தொடக்கம், சாதாரண தொழிலாளி வரையும் இச் சுயேட்சை பட்டியல்களில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களைத் தவிர வெற்றிலைச் சின்னத்தில் ஆளும் கட்சியும், யானை சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டி போடுகின்றன.
இந்த இரண்டு சிங்கள கட்சிகளும் ஆண்டாண்டு காலமாகச் சொல்லிவந்த வடக்கு அபிவிருத்தி பற்றியே இன்றும் பேசுகின்றனர். ஆனால் இடம்பெயர்ந்த மக்களுக்கே சரியான உதவிகள் இல்லாமல் நடுத்தெருவில் விட்டிருக்கும் இவ் அரசு யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி என்பது மக்களை ஏமாற்றுவதே தவிர வேறல்ல.
இவ்வளவு நாளும் யாழ்ப்பாணத்திற்கு இந்த அமைச்சர்கள் என்ன அபிவிருத்தியை கொண்டுவந்திருக்கிறார்கள். அழகான பெயர்கள் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என ஆனால் இளைஞர்களுக்கு வேலையில்லை. எந்த அபிவிருத்தியும் இல்லை. யுத்த அழிவுகளில் இருந்து மக்கள் மீளவும் இல்லை. தொழில்நுட்ப கல்லூரியை தின்று ஏப்பமிட்டவர்கள், அபிவிருத்தியைப் பற்றிப் பேசும் அமைச்சரும் என எல்லோரும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
எப்படியானவர்கள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள் என்பது மாணவர் சமூகத்திற்குத் தெரியும்.
இவை ஒருபுறம் இருக்க, நாம் உண்மையான தமிழ் தேசிய வாதிகள் என கூட்டமைப்பை விட்டு விலகிய ஒரு சிலரும் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுடைய முக்கிய நோக்கம் திருமலையில் சம்பந்தனைத் தோற்கடிப்பதும், யாழ்ப்பாணத்தில் மாவை.சேனாதிராசாவையும், சுரேஷ் பிறேமச்சந்திரனையும் தோற்கடிப்பதுதான் தமது உடனடிப் பணி எனக் களத்தில் இறங்கியுள்ளனர்.
தேசியம், தாயகம் என்று பேசுபவர்களுக்கு வடக்கு கிழக்கில் முழுமையாகப் போட்டியிட வேட்பாளர்களும் கிடைக்கவில்லை. திருமலையில் சம்பந்தனைத் தோற்கடிக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் களத்தில் இறக்கிய வேட்பாளர் யாரெனில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கத்துவம் பெற்று அரசுடன் வேலை செய்தவர் தான் இன்று தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட கஜேந்திரகுமாரின் வேட்பாளர்.
தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் இவர்கள் எல்லோரும் நிற்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள். இவர்கள் எல்லோரையும் தெளிவாக இனங்கண்டு கொள்ளுங்கள்.
தமிழ் மக்கள் விடிவு பெற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பூமகள் சனசமூக நிலையத் தலைவர் குமணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிறீ முருகன் மாதர் சங்கம், பூமகள் சனசமூக நிலையம், சிறீ முருகன் ஆலய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment