எட்டு நாடாளுமன்ற ஆசனங்களுக்காக யாழ்.மாவட்டத்திலிருந்து 324 பேர் போட்டியிடுகின்றனர். இத் தேர்த லில் யாழ்.மாவட்டத்திலிருந்து 15 அரசியல் கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளன. நாடு முழுவதிலும் 196 நாடாளுமன்ற ஆசனங்களுக்காக 7 ஆயிரத்து 265 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுக்களும் கட்சிகளுமாக 32 குழுக்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன.இலங்கையின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது யாழ்.மாவட்டத்திலேயே கூடுதலான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 16 கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் ஆகும். கட்சிகளில் சிறிலங்கா தேசிய முன்னணியினதும் சுயேட்சைக் குழுக்களில் நான்கினதும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது 15 கட்சிகளும் 12 சுயேட்சைக் குழுக்களுமாக 27 தரப்புக்கள் இந்தத் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,ஐக்கிய தேசியக் கட்சி,சோசலிச சமத்துவக் கட்சி,
எல்லோரும் மக்கள் எல்லோரும் மன்னர்கள் கட்சி,ஜனசத பெரமுன, ஈழவர் ஜனநா யக முன்னணி,ஐக்கிய சோசலிச கட்சி,இடது சாரி விடுதலை முன்னணி, ஜனநாயக தேசியக் கூட்டணி, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (புளொட்டுடன் இணைந்து),
ஜனநாயக ஐக்கிய முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட தரப்புகளே கட்சிகளாகத் தேர்தல் களத்தில் குதித்துள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத் தேர்தல் களமே தற்போது மிகவும் சூடானதும், பரபரப்பானதுமாக மாறியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய தரப்புகள் நேற்று தேர்தல் களத்தில் குதித்துள்ளன.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. குடாநாட்டின் முன்னணி புத்திஜீவிகள் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பாடசாலையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்,வைத்தியர்கள் எனப் பலரையும் கொண்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
முதன்மை வேட்பாளராக யாழ்.குடாநாட்டின் முன்னணி பொருளியல் ஆசிரியரான சின்னத்துரை வரதராஜா முன்னணி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தப் பட்டியலில் பத்மினி சிதம்பரநாதன் செல்லத்துரை கஜேந்திரன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் பிரேரிக்கப்பட்டிருக்கின்றனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் வீ. ஆனந்தசங்கரி முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் சார்பில் ஸ்ரீதரன் போட்டியிடுகின்றார்.இதனிடையே இடதுசாரி விடுதலை முன்னணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் முதன்மை வேட்பாளராக நல்லதம்பி ஸ்ரீகாந்தா குறிப்பிடப்பட்டுள்ளார்.
மற்றுமொரு வேட்பாளராகத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கனகலிங்கம் சிவாஜிங்கம் பிரேரிக்கப்பட்டிருக்கின்றார். மேலும் ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியின் வேட்புமனுவும் நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் 8 இடங்களை ஈ.பி.டி.பி. கட்சியும், 4 இடங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியும் பெற்றிருக் கின்றன.
இதில் முதன்மை வேட்பாளராக ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட் டுள்ளார். யாழ்.மாவட்டத்திலிருந்து 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப் பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7 ஆயிரத்து 265 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய மூன்று கட்சிகளான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுக்கு 22 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. நாடு முழுவதிலும் 298 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. 196 நாடாளுமன்ற ஆசனங்களுக்காகவே 7 ஆயிரத்து 265 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு மேலதிகமாக நாடு தழுவிய ரீதியில் பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் அடிப்படையில் 29 தேசியப் பட்டியல் ஆசனங்கள் வழங்கப்படவுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 836 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தமிழர் செறிந்து வாழும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 324 வேட்பாளர் போட்டியிடுகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment